Kamal-Haasan2செவாலியே விருது அறிவிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது:

பிரான்ஸ் அரசின் கலை – இலக்கியத்துக்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரும் அறியச் செய்த காலம் சென்ற சத்யஜித்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இச்செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதருக்கு என் நன்றி.

இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கைமண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைகடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருவசம் மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது. இதுவரையிலான என் கலைபயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன்.

கைதாங்கி எழுத்தும், கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே, நான் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள் 4 வயது முதல் என் கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். என்னை பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கிவிடுகிறது. நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

English Summary :Kamal will be given the honor of Chevalier of France