சிம்பு என்றாலே சர்ச்சைதான் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக நேற்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இது தமிழ்நாட்டின் வாழ்வதாரப் பிரச்சினை, இந்த பேராட்டத்தில் நடிகர்கள் அவர்களாகவே கலந்து கொள்வதுதான் அவர்களது உணர்வை வெளிப்படுத்தும் செயல். நடிகர் சங்கம் சார்பில் மொத்தமாக அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. யாருக்கும் தனித்தனியாக கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கவில்லை.

அப்படியிருக்க சிம்பு தனக்கு அழைப்பு வரவில்லை என நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

இது தொடர்பாகநேற்று சந்திப்பில் கூறியதாவது:

“காவிரி பிரச்சினை, மீத்தேன், ஸ்டெர்லைட் பிரச்சினைன்னு ஓடிக்கிட்டிருக்கு. இதற்காக மக்கள் போராடுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வளவு பிரச்சினை போய்க்கிட்டிருக்கு. இதில் பேசப்படும் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் மேட்ச் ஆரம்பித்துவிட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வருது. இதில் பலரும் நியாயமான கருத்தை முன் வைத்துள்ளனர்.

இப்படி ஒரு பிரச்சினை நடந்து வரும் நேரத்தில், வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் எல்லாம் தேவையா? நம்ம வாழ்க்கையே ஒரு விளையாட்டாக இருக்கும் போது இந்த விளையாட்டு தேவையா, நாம் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நல்ல கருத்து தான், ஆனால் இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்திருக்கு. இது விஷயமாக அப்பாவிடம் பேசும்போது சொன்னார். டிக்கெட்டெல்லாம் விற்று விட்டார்கள், கருப்பு சட்டை போட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். ஆனால் டிஆர் சொன்னால் பிரச்சினை. ரஜினி, கமல் சொன்னாலும் பிரச்சினை.

இப்ப பேசுவதுதான் பிரச்சினை அல்லவா? எல்லோரும் தமிழனுக்காக பேசுகிறார்கள். மேட்ச் பார்ப்பதற்காக செல்லுங்கள். ஆனால், போகிறவர்கள் கருப்பு டிரஸ் அணிந்து செல்லுங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எங்களை தயவு செய்து உள்ளே விடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அதாவது ஐபிஎல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிறேன்.

தோனி, இரண்டாவது தடவையாகவும் கேப்டனாக வருகிறார். அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு எனக்கு. நம் தமிழ்நாடு மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பை விட அதிகமாக அன்பு வைத்துள்ளவர் தோனி. அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தைப் பார்ப்பார்.

அவர் போராட்டம் நடத்த வேண்டும், போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களால் செய்ய முடியும் சின்ன விஷயத்தை எதாவது ஒரு ரூபத்தில் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் அவருக்கு தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு உண்டு என்று தெரியும் அதனால் கேட்கிறேன்.”

தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English Summary: Simbu’s request at the press Meet.