நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த வானொலி சேவை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், விதைகள், உரங்கள், நோய்கள், புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய வேளாண் முறைகள் ஆகியவை குறித்த அறிவிப்புகளும், நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும்.

கேரள மாநிலத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் 30 லட்சம் ஹெக்டேராக இருந்த வேளாண் நிலம், கடந்த 2016-17ம் ஆண்டில் 25.8 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. வேளாண்மை செய்வதற்காக விவசாய நிலம் இருந்தபோதிலும் அதில் மக்கள் விவசாயம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். மக்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்த வானொலி தொடங்கப்பட உள்ளது.

அதிலும் முதன்முறையாக ஒரு மாநில அரசு விவசாயிகளுக்காக பிரத்யேக வானொலி தொடங்குவது இதுதான் நாட்டிலேயே முதல் முறையாகும்.

கேரளாவின் ‘நெற் களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் இந்த சமுதாய வானொலி முதல் முறையாக தொடங்கப்படுகிறது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசின் 2-ம் ஆண்டு தொடக்கவிழாவின் போது இந்த சமுதாய வானொலி ஒலிபரப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது. உலகிலேயே கடற்கரை மட்டத்துக்கு கீழே விவசாயம் செய்யப்படுவது குட்டநாடு பகுதியில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலியில்,விவசாயிகளுக்கு தேவையான குறிப்புகள், காலத்துக்கு ஏற்ப என்ன பயிர் செய்வது, காலநிலை அறிவிப்புகள், நாள்தோறும் வானிலை அறிவிப்புகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, பயிர்களில் காலத்தில் ஏற்படும் நோய்கள், மருந்துகள், உரங்கள்,விதைகள், பாரம்பரிய விவசாய முறைகள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான குறிப்புகள் இதில் இடம் பெறும்.

இது குறித்து வேளாண்துறை அமைச்சர் விஎஸ் சுனில் குமார் கூறியதாவது:

“குட்டநாட்டில் விவசாயிகளுக்கான வானொலி ஒலிபரப்பு வெற்றிகரமாக தொடங்கப்பட்டபின், சிறப்பு வேளாண் மண்டலங்களில் அதேபோன்று சமுதாய வானொலி தொடங்கப்படும்.

இந்த வானொலி, வேளாண் துறையின் வேளாண் தகவல் அமைப்பின் கீழ் தொடங்கப்பட உள்ளது. இந்த வானொலி மூலம் விவசாயிகள், தங்களுக்கு தேவையான அறிவிப்புகளைப் பெற முடியும், பல வேளாண் வல்லுநர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி சந்தேகங்களை தீர்க்க முடியும். விவசாயிகளுக்காக அரசின் சார்பில் தொடங்கப்படும் முதல் வானொலி இதுவாகத்தான் இருக்கும். குட்டநாடு பகுதியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த வானொலி ஒலிபரப்பாகும்.

கேரளாவில் பாரம்பரியமாக விவசாயம் செய்யும் பகுதிகளும் மெல்ல குறைந்து வருகிறது. மக்கள் வேறுவேலைக்கு மாறி வருகிறார்கள், விவசாயத்தின் மீது நாட்டம் குறைந்து வருகிறது. காலத்தில் மழை பெய்தாதது, பருவநிலைமாற்றம் காரணமாக விவசாயத்தில் லாபம் குறைந்ததால், மக்கள் விவசாயத்தை மறக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில், விவசாயத்தில் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் இந்த வானொலி தொடங்கப்படுகிறது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த வானொலி ஒலிபரப்பைத் தொடங்கும்.”

English Summary: Kerala Govt to launch ‘community radio’ to update farmers.