பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. அடுத்ததாக ரேஷன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் எஸ் ஜானகி தெரிவித்தார்.