சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 588 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1,150 பேரின் விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இந்த 181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 32 மாவட்ட தலைநகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு, 773 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 பேரில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 490 பேர் (73 சதவீதம் பேர்) தேர்வு எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று மாலை தெரிவித்தது. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, ஒரு பதவிக்கு 925 பேர் போட்டியிடுகின்றனர்.
நேற்று நடந்த முதல்நிலை தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.