அந்தமான் அருகே இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
கிழக்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (27.11.2023) தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிச. 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.