ஒருசில குறிப்பிட்ட நோய்களுக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும் என்ற விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே இல்லாததால் பல மருத்துவமனைகளில் மாறி மாறி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்க்கு இந்த மருத்துவமனைதான் சிறந்தது என்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் சரியான மருத்துவமனையை அணுக நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும். இதற்காக உதவுவதற்கே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இந்தியாவில் உள்ள தரமான மருத்துவமனைகளை கண்டறிய உதவுவதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆக்மி கன்சல்டிங் நிறுவனம் ‘qhealth4u’ என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சிறந்த மருத்துவ சேவை, தரமான மருத்துவம், நோயாளிகளுக்கு இணக்கமான சூழ்நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த மருத்துவமனைகள், மருத்துவ சேவை மையங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (என்.ஏ.பி.எச்.) சான்றளிக்கப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்களை இந்த இணையதளம் வெளியிட உள்ளது.
என்.ஏ.பி.எச். வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கே.கே.கால்ரா அவர்கள் இந்த இணையதளத்தை தொடக்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: பொதுமக்கள், தரமான மருத்துவமனைகளை தேடி செல்லும்போது மருத்துவச் சேவையில் பெரும் மாற்றம் நிகழும். இதனால் மருத்துவமனைகளின் தரம் மேலும் உயரும். இந்தியா முழுவதும் என்.ஏ.பி.எச்.-ன் அங்கீகாரம் பெற்ற 500 மருத்துவமனைகள் உள்ளன. இதிலிருந்து பொதுமக்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுக்க முடியும்’ என்று கூறினார்.
“அசோஷியேசன் ஆஃப் ஹெல்த்கேர் புரவைடர்ஸ்” (ஏஎச்பிஐ) தலைமை இயக்குநர் டாக்டர் கிரிதர் ஜே.கியானி, ஆக்மி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ஜி.மேனன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
English Summary: A website to find quality hospitals .Chennai company started.