ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண்களை இணைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதால் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலி ரேஷன் அட்டைகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ரேஷன் அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணியை வரும் ஜூன் மாதம் முதல் தமிழக அரசு துவக்க உள்ளது.

இது குறித்து உணவுப்பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. ஆதார் அட்டைக்கான ‘பயோமெட்ரிக்’ பதிவை பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் இணைக்கும் அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும். அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான முகாம் நடத்தப்பட உள்ளது.

ரேஷன் அட்டையில் ஒருவரது பெயர் 2 பகுதியில் இருந்தாலும், இறந்தவர்களின் பெயர் இருந்தாலும் நீக்கம் செய்ய வேண்டும். திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டில் பெயர் நீக்கம் செய்து, புகுந்த வீட்டு ரேஷன் அட்டையில் சேர்க்க வேண்டும். 2 பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் ஒரே எண்ணாக இருந்தால், கணினியில் பதிவு செய்யும்போது, தானாகவே 2 பகுதிகளிலும் ரேஷன் அட்டைகள் ரத்தாகி விடும்.

மீண்டும் புதிதாக விண்ணப்பித்து ஏதாவது ஓரிடத்தில் அட்டை பெற வேண்டியிருக்கும். எனவே, மே மாத இறுதிக்குள் 2 அட்டைகளில் பெயரோ, இறந்தவர் பெயரோ ரேஷன் அட்டைகளில் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளது’ என்றார்.

English Summary: Duplicate Aadhar Card Nos in Family Ration Card will be find out and to be removed.