தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெற்றவர்கள் அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பெற்றவர்கள் தங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டலோ அல்லது சேதப்படுத்தி விட்டாலோ வேறு அட்டை பெறும் வசதி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மூலம் ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது: ஆதார் அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும் இந்த அட்டை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்று அமைக்கப்படவுள்ளது என்றும் இதற்காகவே யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
ஒரு நபர் எத்தனை பிளாஸ்டி அட்டைகளை வேண்டுமானாலும் ஒவ்வொன்றுக்கும் ரூ.30 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அவர், ஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகை அல்லது ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகே அவர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் ஒருவருடைய அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
English Summary: New Aadhar Card is going to introduced on Rs.30. This will be in plastic.