போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை முற்றிலும் தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் திட்டத்துக்காக, தமிழகத்தில் 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்காக தமிழகத்தில் நான்கு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் முகாம் கடந்த 12-ஆம் தேதி ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த முகாம் வரும் 26 ஆம் தேதி நடத்தப்படுகிறது என்றும் தமிழகத்திலுள்ள 64 ஆயிரத்து 96 வாக்குச் சாவடிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 1- ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 5.62 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 3 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 55% என்றும் அதேபோன்று இதுவரை பெறப்பட்ட விவரங்களில் 1.82 கோடி வாக்காளர்களின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விட்டன என்றும் இதன் மூலம் 33% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியான படிவங்கள் வழங்கப்பட்டு வருவதால் குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால், எதிர்காலத்தில் அனைத்திற்கும் ஒரே படிவத்தைப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்று சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
English Summary: Aadhar Card No. adding in Election Card is more than 55% work finished.