சென்னையில் ஆவின் பால் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பால் விற்பனை செய்து வருகிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் இரவு தாமதமாக வரும் தம்பதிகளுக்கு பால் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்க்க காலை முதல் இரவு 8 மணி வரை பால் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆவின் நிறுவனம் சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு ஆவின் பாலகங்கள், ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் காலை முதல் இரவு 8 மணி வரை ரொக்க விலையில் பால் கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய பிப்ரவரி 1 முதல் ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனடிப்படையில் ஆவின் பால் சென்னையில் 16 வட்டார அலுவலக பகுதிகளில் அமைந்துள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் ஆவின் நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ.18.50–க்கும் மற்றும் பச்சை நிற பாக்கெட் (ஸ்டான்டடைஸ்ட் மில்க்) ரூ.20.50–க்கும் விற்பனை செய்யப்படும்.
மேலும், கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மொத்தமாக மாலை வேளையில் தேவைக்கேற்ப ஆவின் பால் வழங்க முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்த தேவைக்கு முன்பதிவு செய்ய நுகர்வோர்கள் அந்தந்த பகுதி வட்டார அலுவலகங்கள் அல்லது நந்தனம் விற்பனை பிரிவு அலுவலகத்தை 23464578 அல்லது 9445530503 என்ற போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமையல் கலைஞர்கள் ஆவின் பால் மொத்தமாக ஆர்டர் செய்யும்போது அவர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும், விபரங்கள் அறிய துணைப் பொது மேலாளர்கள் வடக்கு மண்டல அலுவலகம் 23464570, மத்திய மண்டல அலுவலகம் 23464551, தெற்கு மண்டல அலுவலகம் 23464587 மற்றும் ஆவின் 24 மணி நேர நுகர்வோர் சேவை மையத்தை 1800 425 3300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Aavin Milk Available in till 8 P.M in Chennai.