சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள மக்களின் பால் தேவைகளை பூர்த்தி செய்து வரும் ஆவின் நிறுவனம் அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருக்கும் பொதுமக்களின் வசதிக்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான மாதாந்திர பால் அட்டைகளை வழங்க வேண்டுமென ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
சென்னை மாநகரில் பால் விற்பனை நாளொன்றுக்கு 11.70 லட்சம் லிட்டர் என்ற அளவில் உள்ளது. சென்னை நகரில் பால் விற்பனை இலக்கு அடுத்த ஆண்டு (2016) மார்ச் மாதத்துக்குள் நாளொன்றுக்கு 13.5 லட்சம் லிட்டர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால்-பால் பொருள்கள் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்க ஏதுவாக புதிய முகவர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பால் விற்பனையை அதிகப்படுத்த ஆவின் பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குப் பிறகு வரும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நேரில் செல்வர். அவர்கள் நுகர்வோர்களுக்கு உடனடியாக மாதாந்திர பால் அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் உணவக உரிமையாளர்கள்-சமையல் கலைஞர்கள், ஆவின் பால் வாங்கும்போது சில்லறை விற்பனை விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.1 குறைவாக வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்கள் பெற தனியான ஒரு சேவை மையம், 9445530503 என்ற எண்ணில் செயல்பட்டு வருகிறது. நுகர்வோர் தங்களது ஆலோசனை-புகார் பற்றி தெரிவிக்க ஆவின் 24 மணிநேர நுகர்வோர் சேவைப் பிரிவு 1800 425 33 00 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம்”

இவ்வாறு அமைச்சர் என்று ரமணா பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறைச் செயலாளர் விஜயகுமார், ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English Summary : Aavin introduces new facility for Apartment residents in Chennai.