முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமாகிய அப்துல்கலாம் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது நினைவாக ஆண்டுதோறும் விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் ‘இளைஞர் எழுச்சி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும், ‘அணுசக்தி நாயகன்’ என்றும், ‘தலைசிறந்த விஞ்ஞானி’ என்றும், ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் ‘பாரத ரத்னா’” டாக்டர் அப்துல் கலாம் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.
ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார். குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி, அதன் பின்னரும் சரி, அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது.
2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல் கலாம். மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரால் தான் அந்தக் கனவை நனவாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்’ என தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.
‘வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி’ என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார். அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்.
எனவே, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ என தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வலிமையான பாரதம்; வளமையான தமிழகம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்கு வலுவூட்டும் வகையில், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.
இந்த விருதாளருக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary : Abdul Kalam’s birthday to be declared as ”Youth Uprising Day” by the Tamilnadu government.