மின் பெட்டி அருகில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்ய கவுடா சாலையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளைக் கடந்த மே 25-ம் தேதி மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக சாலைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் தற்போது புதிய சாலைகள் அமைக்கும் நடைபெற்று வருகிறது. அதை ஆணையர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, துரைசாமி சுரங்கப்பாதை அருகில் உள்ள அணுகு சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய சாலை அமைக்கும் பணிக்காக, பழைய சாலையின் மேற்பரப்பு முழுவதும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, அணுகு சாலையில் மின்கலப் பெட்டி அருகிலிருந்த குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டு, பணியாளர்களுடன் இணைந்து ஆணையரும் குப்பையை அகற்றினார். மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற மின்கலப் பெட்டிகளின் அருகிலும், மின்மாற்றிகளின் அருகிலும், முக்கிய சந்திப்புகளிலும் உள்ள குப்பையை அகற்றுவதோடு, இத்தகைய இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.