சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், துணை கமிஷனர் மனோகரன் தலைமையில், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த செயல் முறை விளக்க நிகழ்ச்சியில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 70 மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவல் நிலைய செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகிய காவல் பிரிவுகளின் செயல்பாடுகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் வகைகள், தொடர்பு கருவிகள், அவசர காலத்தில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கும் விளக்கமாக கூறப்பட்டது.

மாணவ-மாணவிகள் தெரிந்து கொண்ட தகவல்கள் குறித்து, அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, அவர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தது காவல்துறையினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

English Summary : Chennai Anna Nagar police station explain the action program for students.