தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வரத்து குறைவால், மக்கள் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் தக்காளி விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்கப்படுகிறது.
தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.90, ரூ.100 என்று இருந்தபோதே, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழகம் முழுவதும் உள்ள 60-க்கும் மேற்பட்ட பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு, அதாவது ரூ.60 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
ரூ.60-க்கு தக்காளி விற்பனை:
அதன்படி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில், கொள்முதல் விலைக்கே தக்காளி விற்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த விற்பனையை ஆய்வுசெய்த அமைச்சர் பெரியகருப்பன், தக்காளியைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததுடன், இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது தக்காளி விலை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.