சென்னை: நாளை (14ம் தேதி) நடக்கும் வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்காளர் பெயர் சேர்க்க, எளிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்’ என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.தேர்தல் கமிஷன், லோக்சபா தேர்தலுக்கு முந்தைய, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

இரு மாதமாக, வாக்காளர் பெயர் சேர்ப்புப்பணி நடக்கிறது. மக்கள் வசதிக்காக, ஞாயிறு விடுமுறையில், சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.நான்காவது சிறப்பு முகாம், நாளை நடக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 27 ஆயிரத்து 337 பேர், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 18 – 19 வயது வரையுள்ள, 12, 457 பேர், 20 – 21 வயது வரை, 5,259 பேர்; 22 வயதுக்கு மேல், 9,621 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்க கோரி, 1,660 பேர்; திருத்தம் செய்ய, 3,731 பேர்; ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, 2,157 பேர் என, மொத்தம், 34 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பப் படிவம், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது.

இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில், 65 சதவீதம் பேர், இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது சிறப்பு முகாம் நாளை நடக்கவுள்ளது.வரும், 31ம் தேதி வரை பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம்.’நாளை நடக்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி, தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்’ என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ‘கலர் போட்டோ’ மாற்றலாம்! போட்டோவுடன் கூடிய, வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டை, 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது.

பழைய போட்டோவுடன் உள்ள அடையாள அட்டையை, வேறு ஆவணமாக பயன்படுத்த முடிவதில்லை.அடையாள அட்டையில், புதிய ‘கலர் போட்டோ’ வை மாற்ற, படிவம் -8ல் விண்ணப்பிக்கலாம். முகாமில், எளிய முறையில் விண்ணப்பித்தால், இறுதி பட்டியல் வெளியான பின், பொது சேவை மையத்தில், புதிய போட்டோவுடன் கூடிய அட்டையை, எளிதாக ‘பிரின்ட்’ செய்து பெற்று கொள்ளலாம் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *