வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுபமுகூர்த்த நாளான செப்.8-ம் தேதி, வார இறுதி நாட்களான செப்.9, 10-ம் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள இதுவரை 10,545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்.8-ம் தேதி தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரில் இருந்து கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் என 600பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், செப். 8-ம் தேதி வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாமுடிவடைவதால், வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.