வரும் 21ஆம் தேதி அட்சயதிருதியை தினம் வருவதால் அன்றைய தினத்தில் தங்கம் வாங்கும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக “கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சந்திப்பில் இந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.
சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்யும்போது செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். ஆனால் ஒருசில நகை வியாபாரிகள் வெள்ளை உலோகங்களான ஆஸ்மியம், பெல்லாடியம், இரிடியம், ருதீனியம் ஆகிய உலோகங்களை சேர்த்து நுகர்வோர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த உலோகங்கள் வெவ்வேறு உருகும் கொதி நிலை தன்மையை கொண்டிருப்பதால் இந்த உலோகங்களை இடித்து பொடி செய்து உருகிய நிலையில் தங்கத்துடன் கலந்து போலியான நகைகளை ஒருசிலர் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட தங்கத்தைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதால் நுகர்வோர் எளிதில் ஏமாந்து விடுகின்றனர். எனவே அட்சய திருதியை நாளில் தங்கத்தை ஆர்வமுடன் வாங்கி சேமிக்க விரும்பும் பொதுமக்கள், தங்கம் வாங்கும்போது கலப்படம், எடைக்குறைவு போன்றவற்றால் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை எடுத்து கூறினார்.
வெவ்வேறு உலோகங்களை பயன்படுத்தி கலப்படம் செய்யும் வியாபாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கவும், நாட்டில் உள்ள ஹால்மார்க் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பேட்டியின்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம், அமைப்பின் அறங்காவலர் தேசிகன், தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary: Advise for peoples who want to buy gold and other ornaments on Akshaya Tritiya Day.