கடந்த ஒரே ஆண்டில் 4,704 தாய்மார்களிடம் தாய்ப்பால் தானமாகப் பெற்று, தாய்ப்பால் கிடைக்காத 3,849 பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி சென்னை தாய்ப்பால் வங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மேலும் தொடரும் என தாய்ப்பால் வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் தானம் குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளதாவது:
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 2014ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு 1,107 பெண்களிடம் இருந்து தாய்ப்பால் தானமாகப் பெற்றப்பட்டு, 1,104 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2015ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த 8 அரசு மருத்துவமனைகளிலும், தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஜனவரி 24-ஆம் தேதியும் தொடங்கப்பட்டன.
தாய்மார்களிடம் தாய்ப்பால் தானத்தின் நன்மைகளை எடுத்துக்கூறி, அவர்களின் உடல் தகுதி மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்பு நவீன கருவிகள் மூலம் சுகாதாரமான முறையில் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. இந்தப் பாலை முறையாக கிருமி நீக்கம் செய்து, பதப்படுத்தி மற்றொரு குழந்தைக்கு வழங்கப்படுகிறது. ஒரு தாயிடம் பெறப்பட்ட தாய்ப்பால் உறைநிலையில் 6 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும். அதன்படி தமிழகத்தில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கிகள் மூலம் 4,704 பேரிடம் தாய்ப்பால் தானமாகப் பெறப்பட்டு, தாய்ப்பால் கிடைக்காத 3,849 பச்சிளங்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளங்குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Adventure of chennai breastfeeding bank.