தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேன்ண்டும். இந்நிலையில் இந்த நடவடிக்கைகளில் வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் அடுத்த 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் முழுவீச்சில் செய்து வரும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன், தங்களை பற்றிய முழுவிவரமும் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், தேர்தலுக்கு செய்த செலவு விவரங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு வேட்பாளர்கள் தங்கள் பிரமாண பத்திரம் மற்றும் தேர்தல் செலவினங்களை ஆன்லைன் மூலமே தாக்கல் செய்யும் வழிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தாக்கல் செய்யும்போது தவறான தகவல்கள் அளிப்பதை தடுக்கவும், பிழைகளை குறைக்கவும், மேலும் விரைவாக தாக்கல் செய்வதற்கும் வேட்பாளர்களுக்கு உதவுவதற்கு தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக சிறப்பு உதவியாளர்களை தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது.
வருமான வரித்துறையில் பயிற்சி பெற்ற இந்த சிறப்பு உதவியாளர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மாவட்டந்தோறும் தலா 2 பேர் என நியமிக்கப்படுவார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரமாண பத்திரம் மற்றும் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய இந்த உதவியாளர்கள் உதவி புரிவார்கள்.
இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், வேட்பாளர்களுக்கு எளிதாக சேவை வழங்கவும் வசதியாக, சிறப்பு உதவியாளர்களின் இந்த சேவைக்கான சம்பளத்தை தேர்தல் ஆணையமே வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த உதவியாளர்களின் ஒவ்வொரு சேவைக் காகவும் ரூ.1200, தேர்தல் கமிஷனால் வழங்கப்படும்.
இந்த திட்டப்படி மேற்கு வங்காளத்தில் 111 சிறப்பு உதவியாளர்கள் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த பணியை ஏற்றுள்ளது. தமிழகம் மற்றும் 3 பிற மாநிலங்களிலும் இதே முறையில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் மற்றும் செலவு கணக்கு தாக்கலுக்காக மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் 2 சிறப்பு உதவியாளர்களாவது நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களது தொடர்பு விவரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷன் இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் நடைபெறும் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
English Summary: Affidavits filed to the special arrangements for the candidates. Election Commission Information.