கோவையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து தலைநகரான தில்லிக்கு ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் விமான சேவையை அளித்து வருகின்றன. இருப்பினும், இந்த விமானங்கள் இடையில் ஏதேனும் ஒரு நகரில் இறங்கிச் செல்லும் விதமாகவே சேவையைத் தொடருகின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவையை டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நிலைய மேலாளர் கிரிஜா ரமேஷ் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை அளித்து வருகிறது. தற்போது கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, தில்லி போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஏஐ 547 என்ற விமானம், இரவு 9.15 மணிக்கு தில்லியில் இருந்து புறப்பட்டு அதிகாலை 12.30 மணியளவில் கோவையை வந்தடையும். அதேபோல் ஏஐ 548 என்ற எண்ணுள்ள விமானம் கோவையில் இருந்து அதிகாலை 1 மணிக்குப் புறப்பட்டு காலை 4 மணிக்கு தில்லியை சென்றடையும்.
இந்த விமானம், 20 வெளிநாடு, 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களுக்கு இணைப்பாக இருக்கும். 15 நாள்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.2,944 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.