தீபாவளி திருநாளில் சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக தமிழக அரசு அறிவித்தது. தீபாவளி திருநாளில் சென்னையில் காற்றின் தரத்தை கண்டறிய பல இடங்களில் குறிப்பாக திருவல்லிக்கேணி, தியாகராயநகர், வேளச்சேரி என காற்று மாசை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்னையில் குறைந்த அளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் 65 குறியீடாக காற்று மாசு பதிவாகி இருந்ததாகவும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் குறியீடு 87 ஆகவும், ஆக்ராவில் 353 என்ற அளவிலும் இருந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை, கண்டறியும் கருவி, சென்னையில், தியாகராயநகர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் நிறுவப்பட்டு, கணக்கிட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.