தமிழகம் உள்பட அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் காரணமாக ‘இ-பாடசாலா’ என்ற மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில பாடத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கடந்த மார்ச் மாதம் டெல்லியில் ஆசிரியர்களுக்கு என்சிஇஆர்டி மூலம் உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து சேலம் விஜயானந்த், திருவாரூர் சுரேஷ், விழுப் புரம் விஜயகுமார், திருவள்ளூர் சிங்கராஜ், ஈரோடு உமாமகேஷ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சி முடிந்து பணிக்குத் திரும்பிய இவர்கள், முதல் கட்டமாக 10ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டங்களை மின்னியமாக்கி முடித்திருப்பதாகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.சி.டி.) கீழ் இவர்கள் இந்தப் பணியை செய்து முடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.டி.-யின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.உமா மகேஷ்வரி கூறியபோது, ‘பாடத் திட்டங்களை காகிதமயத்தில் இருந்து மின்னியமாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்படி பாடங்களை அலைபேசியிலேயே ஃபிலிப் முறையில் படிப்பதற்கான வசதியை கொண்டு வந்திருக்கிறோம். பாடத்தை க்ளிக் செய்தால் அதை கணினியே நமக்கு வாசித்துக் காட்டும் வசதியும் இருக்கிறது. புத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்யவோ, கூடுதல் தகவல்களை சேர்க்கவோ முடியாது. ஆனால், மின்னியத்தில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ள முடியும்.
மேலும் ஒரு பாடத்தை ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் எளிய முறையில் நடத்துகிறார் என்றால் அது சம்பந்தப்பட்ட வீடியோ இணைப்புகளையும் மின்னியத்தில் கொடுக்க முடியும். முதல் கட்டமாக 3 பாடங்களை கிட்டத்தட்ட மின்னியமாக்கி முடித்திருக்கிறோம். தமிழில் ஃபான்ட் மாற்றம் செய்வது கடினமாக இருப்பதால் அதிக நேரம் பிடிக்கிறது. எனவே, கூடுதல் ஆசிரியர்களைக் கொண்டு ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் மின்னியமாக்கி முடிப்பதற்காக 25 ஆசிரியர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருக்கிறோம். அவர்களுக்கான பயிற்சிகள் திருச்சியில் இன்று தொடங்குகிறது’ என்று கூறினார்.
ஐ.சி.டி. பொறுப்பாளர் பேராசிரியர் ஆசிர் ஜூலியஸ் கூறும் போது, ’’இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணினிகளையும் அலைபேசிகளையும் பயன்படுத்தும் குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள். எனவே, இனி வரும் காலத்தில் நமது பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளை தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து பாடங்களையும் ஒரு மெமரி கார்டுக்குள் அடைத்துக் கொடுத்துவிட முடியும்.
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அலைபேசி வழியாக நமது பாடத்திட்டங்களை பார்க்க முடியும். எங்களிடம் உள்ள அடிப்படை வசதிகளையும் இலவச மென்பொருட்களையும் கொண்டு நாங்கள் இந்தப் பணிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறினார்.
English Summary: All Subjects with in Memorycard. Tamilnadu Education Digitalized.