சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க துணைத் தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தின் திறப்பு விழாவில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் பிலிப் மின் கலந்து கொண்டார்.
நூலகத்தை திறந்து வைத்து பேசிய பிலிப் மின், ‘கடந்த 68 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில், இப்போதைய டிஜிட்டல் யுகத்துக்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், முன்பு இருந்ததைவிட தற்போது புத்தக அலமாரிகளும் வாசகர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும் அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்ளவும் இங்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி குழந்தைகளுக்கான புதிய பிரிவு, சிறிய நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்கான இடமும் தற்போது நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்த நூலகத்தில், தற்போது 2 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இணையதளங்களின் மூலம் டவுன்லோடு செய்து புத்தகங்களை படிக்கும் வழக்கம் அதிகரித்து உள்ளதே உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய காரணம் என்று அமெரிக்க துணைத் தூதரக நூலகப் பிரிவு ஊழியர்கள் கூறினர்.
மேலோட்டமான தகவல்கள் தேவைப்படுவோர்களுக்கு வேண்டுமானால் இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் உயர் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் தகவல்களைத் தேடுபவர்களுக்கு நூலகங்களே மிகவும் உதவிகரமாக இருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த நூலகத்தில் உறுப்பினராகிவிட்டால், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க நூலகங்களில் உள்ள புத்தகங்களையும் பெற முடியும் என்று கூறிய நூலக அலுவலகர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ள நூலக பெயர்ப் பட்டியலை American Library in Chennai என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் இணையதளத்தின் மூலமே உறுப்பினராகும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
English Summary: New Library is going to open in American Consulate in Chennai.