அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு உள்பட பல்வேறு திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி குறைந்த விலையில் கிடைக்க அம்மா வாரச்சந்தை திறக்கப்படும் என கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியதால் அந்த பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் அம்மா வாரச்சந்தையை தொடங்க மீண்டும் சென்னை மாநகராட்சி தீவிர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. மாநகராட்சிக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னர் பெருவாரியான ‘அம்மா வாரச்சந்தை தொடங்கவும் முதல்கட்டமாக 3 அம்மா வாரச்சந்தை தொடங்க இடம் பார்த்து முடிவு செய்துவிட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,
சென்னையில் முதல்கட்டமாக மிண்ட் மேம்பாலம் அருகிலும், அரும்பாக்கத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அருகிலும், கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் அருகிலும் வாரச்சந்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்மா வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. இடைத்தரகர்கள் இல்லாமல் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க இந்த வாரச்சந்தை உதவியாக அமையும். சிறு வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை பொதுமக்கள் கவரும் வகையில் இதில் இடம் பெறச் செய்ய வேண்டும். இதற்காக 10-க்கும் மேற்பட்ட அரசுதுறை அதிகாரிகளுடன் முறையாக அணுகி அவர்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது’ என்று கூறினர். மேலும் அம்மா வாரச்சந்தையை அடுத்து மற்றொரு திட்டமான அம்மா திரையரங்கம் தியாகராயநகர் மற்றும் முகப்பேர் உள்ளிட்ட சில இடங்களில் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
English Summary: Amma Weekend Market 3 places in Chennai. Start as soon as possible to arrange Corporation.