பள்ளி மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது கல்வியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ. நிர்வாகம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதூ. இதன்படி இனிமேல் மாணவர்கள் மனப்பாடம் செய்து வீட்டுப்பாடங்களை செய்யாமல், செயல்முறை மூலம் கல்வி கற்கும் நிலை இருக்கும் என கூறப்படுகிறது
இதன்படி, பெற்றோருடன் இணைந்து கடிதங்கள் எழுதுதல், புதிர்களுக்கான விடை காணுதல், வீட்டு வரவு-செலவு கணக்குகளை பார்த்தல், சமையல் செய்தல், செய்தித்தாள்கள் படித்தல், ஆவணப் படங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தல் போன்ற புதிய செயல்முறை பயிற்சிகள் மூலம் கல்வி கற்கலாம்.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ”இதுபோன்று பெற்றோர்களுடன் சேர்ந்து, வீட்டு கணக்குகளை பார்ப்பதால், கணக்குப் பாடத்தை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்வார்கள்.
செய்தித்தாள் படிப்பது, ஆவணப் படங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதால், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை புரிந்து கொள்வதோடு, அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை காணும் வகையில் மாணவர்கள் செம்மைப்படுவார்கள். எனவே, இந்த புதிய முறையை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
English Summary : An end to rote learning Education .CBSE introduces the process of education