பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த படிப்பிற்காக 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4-ஆம் தேதியே கடைசி என்ற நிலையில், இதுவரை 81 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த கல்வியாண்டில் முதன் முறையாக முழுவதும் ஆன்-லைன் பதிவு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. மாணவர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆன்-லைனில் பதிவு செய்ய மே 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. நேற்று முன் தினம் அதாவது மே 31ஆம் தேதியுடன் இந்தக் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 2 லட்சத்து 52 ஆயிரத்து 781 பேர் பதிவு செய்தனர். விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சத்து 84 ஆயிரத்து 530 பேர் சமர்ப்பித்திருந்தனர்.
ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசித் தேதியாகும். இதுவரை 81 ஆயிரத்து 100 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளனர். இன்னும் 3 நாள்கள் கால அவகாசம் உள்ளதால், சமர்ப்பிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2015-16ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். கடந்த 2014-15 கல்வியாண்டில் 1.75 லட்சம் பேரும், 2013-14 கல்வியாண்டில் 1.90 லட்சம் பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆவது வாரத்தில் நடத்த பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.பெரும்பாலும் ஜூன் 27-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : Anna university officials explains about BE counseling.