தானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறப்படுவதுண்டு. தற்போதைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் ஆகியவை குறித்து நல்ல விழிப்புணர்ச்சி உள்ளதாகவும், பல இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உடல் மற்றும் கண் தானத்திற்கு பதிவு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் கண்களைத் தானம் செய்ய விரும்பும் பலர் எப்படி தானம் செய்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையைத் தொடர்பு கொண்டால் 20 நிமிடங்களில் கண்களைத் தானமளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 104 சேவை மைய அதிகாரி ஒருவர் கூறியபோது, “தமிழகத்தில் கண்களைத் தானம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய, கண்தானம் குறித்த தகவல்கள், சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற 104 சேவையை அழைக்கலாம். இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்ய விரும்பும் பலருக்கு, உடனடியாக யாரைத் தொடர்பு கொள்வது என்று தெரியாது. இதனால் பலரது கண்கள் தானம் அளிக்க முடியாமல் போகிறது.
இதனைத் தவிர்ப்பதற்கு 104-ஐ உடனடியாக அழைக்கலாம். இந்த சேவைக்காக தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கண்வங்கி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் சுமார் 70 வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்து அழைத்தாலும் கண் தானத்தை 20 நிமிடங்களில் அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். கண்தானம் செய்ய விரும்புவர்கள் 104 எண்ணை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
English Summary: Are you willing to Donate your Eyes?? Just Call 104 to donate..