சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையேயான பணிகள் முடிவடைந்து இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையிலான குழு நடத்திய இந்த ஆய்வில் கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை உள்ள ரயில் நிலையங்கள், சிக்னல்கள், ரயில் பாதைகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகளுக்கு முழு அளவில் திருப்தி ஏற்பட்டிருப்பதாக நம்புகிறோம். கோயம்பேடு – அசோக்நகர் இடையே நடத்தப்பட்ட 2-வது கட்ட ஆய்வு தொடர்பாக 20 கேள்விகளை கேட்டிருந்தனர். அதற்கு எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளோம்.

அடுத்த கட்டமாக அசோக்நகர் – ஆலந்தூர் இடையே அடுத்த 2 வாரங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் வரையில் ஆரம்பத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்க உள்ளோம். பின்னர், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு அடிக்கடி ரயில்களை இயக்கப்படும்’’ என்று கூறினார்.