14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் டோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஒய் சாகல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.