தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதை அடுத்து மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் வரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் மே மாதம் பொதுத்தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ளதால் இந்த காலங்களின் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்காக மின் பராமரிப்புப் பணிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வரும் மார்ச் 4-ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், 10-ம் வகுப்புத் தேர்வு மார்ச் 15-ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 13-ல் முடிவடைகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொதுவாக கோடைகாலம் துவங்கியதும் மின்வெட்டு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் தேர்வு மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த சமயத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டால் அது அந்த பணிகளை பெருமளவு பாதிக்கும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாதி
ப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, அனைத்து மின் பராமரிப்பு பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்குமாறு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்பகிர்மான கழகத்தின் உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது போதிய அளவு பருவமழை பெய்தது மற்றும் காற்றாலை மூலம் போதிய மின்சார உற்பத்தி ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. மேலும், அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும், ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே, அச்சமயத்தில் மின்வெட்டு, மின்தடை ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வு நடைபெறும் சமயத்தில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவதைத் தடுக்க அனைத்து மின் பராமரிப்பு பணிகளையும் இம்மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்த மின்னழுத் தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் மின்சாதனங்களை உரிய முறையில் பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மின்வாரிய தலைமை பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
English Summary: Avoid power cuts at times of Exam, Election. Electric Distribution Corporation Order.