சென்னை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் – டாக்டர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, தோல் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் யு.ஆர்.தனலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், அத்துறை சார்ந்த 12 டாக்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த டாக்டர்கள் உரிய அறிவுரைகளையும் வழங்கினர்.

வெயில் காலத்தில் ஏற்படும் தோல் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றி தெரிவிக்குமாறு பொதுமக்கள் பலர் கேட்டனர். அதற்கு பதில் அளித்து தோல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் யு.ஆர்.தனலட்சுமி பேசியதாவது:

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, சிறிய கட்டிகள், அரிப்பு, தேமல், சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் சோர்வு, மயக்கம் ஏற்படலாம். தோலில் வியர்வை தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழக்கத்தைவிட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் கட்டாயம் குளிக்க வேண்டும். குளித்த ஈரத்தோடு ஆடை அணியக்கூடாது. உடலை நன்கு துவட்டிய பிறகே ஆடை அணிய வேண்டும். மெல்லிய, மிதமான வண்ணங்கள் கொண்ட, தளர்வான பருத்தி (காட்டன்) ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். அவை தளர்வானதாக, காற்று புகும் வகையில் இருக்க வேண்டும். ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

பச்சிளம் குழந்தைகள், சிறுவர்களை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அந்த நேரத்தில் கர்ப்பிணிகளும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் அதிகம் குடிக்க வேண்டும். அம்மை வந்தால் வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Avoid the Jeans and Leggings during Summer Season for Escape from Skin Diseases.