சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மழைநீர் சேகரிப்பு குறித்து மேலும் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பறை இசையுடன் நடைபெற்ற பேரணியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் விழிப்புணர்வு பதாகைகளை குடிநீர் வாரிய ஊழியர்கள் ஏந்தி சென்ற காட்சியை பொதுமக்கள் பார்த்தனர்.
இந்த பேரணியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் கோகுல இந்திரா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ஜே.சி.டி.பிரபாகர், குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் பா.சந்திர மோகன், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகையில் மழைநீர் சேகரிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. வீட்டின் கூரையில் விழும் மழைநீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்ற செய்முறை விளக்க வாகனம் வடிவமைக்கப்பட்டு மெரினா கடற்கரை சாலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டு செல்லப்பட்டது. இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் வாரிய ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த பேரணியின் மூலம் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Awareness of the rain water harvesting in chennai.