ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் வரும் கல்வியாண்டான 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்பிற்காக 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து பி.எட். கலந்தாய்வு செயலர் பாரதி அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்குமான தனிப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது. இந்த தனிப்பட்ட கட்-ஆஃப் தொடர்பில் (லிங்க்) விண்ணப்ப எண்ணை மாணவர்கள் பதிவு செய்தால் தங்களுடைய ரேங்க், கட்-ஆஃப், பாடம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
English Summary:B.Ed Counseling Date Announced.