பெங்களூரு-சென்னை இடையே செல்லும் ரயில்கள் நிறுத்தும் இடங்கள், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டியாபாளையம்-ஈரோடு தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், ஒருசில ரயில்களின் சேவை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது ரயில்களின் புறப்பாடு மற்றும் நிறுத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில ரயில்களின் பயண நேரத்தை நீட்டித்துள்ளதோடு, ஒருசில ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகுதிசேவை ரத்து: ரயில் எண்-12610 பெங்களூரு-சென்னை விரைவு ரயிலின் சேவை, டிச.23-ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது. பெங்களூரு-சென்னை ரயில் சென்னைக்குப் பதிலாக திருவள்ளூரில் நிற்கும். மேலும், ரயில் எண்-12607 சென்னை-பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் டிச.23-ஆம் தேதி சென்னைக்கு பதிலாக திருவள்ளூரில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.
ரயில் எண்-12608 பெங்களூரு-சென்னை லால்பாக் விரைவுர யிலின் சேவை டிச.23-ஆம் தேதி காட்பாடி மற்றும் சென்னை இடையே ரத்துசெய்யப்படுகிறது. பெங்களூரு-சென்னை இடையேயான லால்பாக் விரைவு ரயில் சென்னைக்குப் பதிலாக காட்பாடியில் நிறுத்தப்படும். ரயில் எண்-12609 சென்னை-பெங்களூரு விரைவு ரயில் டிச.23-ஆம் தேதி சென்னைக்குப் பதிலாக காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ரயில் தாமதம்: ரயில் எண்-12295 பெங்களூரு-தானாபூர் விரைவு ரயில் டிச.23-ஆம் தேதி அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு ஒருமணி நேரம் தாமதமாக வந்துசேரும். நேர மாற்றம்: சென்னையில் இருந்து வழக்கமாக மாலை 3 மணிக்குப் புறப்படும் ரயில் எண்-22698 சென்னை-ஹுப்பள்ளி விரைவு ரயில், டிச.23-ஆம் தேதி மட்டும் மாலை 4 மணிக்குப் புறப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.