பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அதே நேரத்தில் பி.இ. கட் ஆப் மதிப்பெண்கள் 0.25 அளவுக்கு குறையும் என்றும் கல்வியாளர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 198-ஆக இருந்தது; இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 198.25-ஆக அதிகரிக்கும்; கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருந்தது; இந்த ஆண்டு அது 197.50-ஆக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளதால் அதன்படி தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 775 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டு பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 1,703 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களும் இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 5 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதனால் எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 முதல் 0.75 வரை குறையும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் முக்கியப் பாடங்களில் ஒன்றான கணித பாடத்தில் இந்த ஆண்டு 3,361 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்றுள்ளனர்; இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் மிகவும் குறைந்வு. எனவே பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. படிப்பைப் பொருத்தவரை ஏராளமான கல்லூரிகளும் படிப்புப் பிரிவுகளும் உள்ளதால், கல்லூரி-படிப்புப் பிரிவின் கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு இந்த கட்-ஆஃப் மதிப்பெண் குறைவை மாணவர்கள் கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

English Summary : Will BE, MBBS cut-off mark increase, or decrease this year.