பெண் பயணிகள் வசதிக்காக, சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்பட்ட ‘பைக் டாக்ஸி’ சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் இணைப்பு இருசக்கர வாகன (பைக் டாக்ஸி) வசதியை கடந்த ஏப்.13-ம் தேதி அறிமுகப்படுத்தியது. முதல்கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டன. இதற்கு, ஆட்டோ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதவிர, தமிழகத்திலும் பைக் டாக்ஸி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளை அழைத்துச் செல்லும் பைக் டாக்ஸி வசதி வழங்கப்பட்டது. இதற்காக, நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் அவர்களிடம் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் பைக் டாக்ஸி சேவை ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது எந்த ரயில் நிலையத்திலும் இந்த சேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.