சென்னையில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சியின் தொடக்க விழா சமீபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியை மேற்கு மண்டல போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் எஸ்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த கண்காட்சியின் ஹைலைட்டாக தலைக்கவசம் அணிந்தால் ஸ்டார்ட் ஆகும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி 4 மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். மின்னியல், மின்னணுவியல் துறை மாணவர்களான கே.புஷ்பராஜ், பி.ராஜசேகர்,பி.பொன்விஜய், எஸ்.பார்த்திபன் ஆகிய 4 மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு கண்காட்சியில் பெரும் ஆதரவு இருந்தது.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் எஸ்.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் இந்த நவீனத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் மாணவர்களைப் பாராட்டுகிறேன். இந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது ஏதேனும் விபத்து, அசம்பாவிதம் நேர்ந்து விட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ், காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கும் வகையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதும் சிறப்பு அம்சம். பெட்ரோல் பயன்படுத்துவதைத் தவிர்த்து சூரியசக்தி மூலம் மோட்டார் சைக்கிள் இயக்கும் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் இதை சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதுகிறேன்” என்று கூறி நான்கு மாணவர்களையும் தனிப்பட்ட முறையிலும் பாராட்டினார்.

இந்த கண்காட்சியில் மேலும் பலவகையான கண்டுபிடிப்புகள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக நெரிசலுக்கு ஏற்றாற்போல சிக்னலைக் கட்டுப்படுத்தும் தானியங்கி சிக்னல், வீட்டுப் பாதுகாப்புக்கான தானியங்கி பாதுகாப்பு சாதனம் ஆகியவைகள் பெரிதும் மக்களால் கவரப்பட்டது.

மேலும் இந்த கண்காட்சியில் ஸ்ரீ முத்துக்குமரன் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ், நிர்வாக அலுவலர் வீரராகவன், ஒருங்கிணைப்பு அலுவலர் எம்.ஆர்.வெங்கடேசன், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் சாந்தி செல்லையா, மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவர் ஜி.ஜானகி ஆகியோர் பங்கேற்றனர்.

English Summary: Bike will start only you will wear the helmet, New Achievement by Chennai Muthukumaran Engineering College Student.