சென்னை சென்ட்ரல் பகுதியில் இரண்டு அடுக்காக வெளிநாட்டு பாணியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிலையங்களில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அங்கேயே சோதனைகளை முடிக்கும் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக விமானத்திற்கே அனுப்பப்படும். இதனால் பயணிகளில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தலைநகர் சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 2017ஆம் ஆண்டிற்குள் முழு அளவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க மிக தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 வழித்தடத்திலும் சேர்த்து மொத்தம் 34 ரெயில் நிலையங்கள் வருகின்றன. 2 வழித்தடங்களும் சென்ட்ரல் மற்றும் ஆலந்தூரிலும் இணைகின்றன.
இந்நிலையில் ஆலந்தூரில் உயர்மட்ட பாதையில் 2 ரெயில் நிலையங்களும், சென்ட்ரல் சுரங்கப் பாதையில் 2 ரெயில் நிலையங்களும் ஒன்றின்மேல் ஒன்றாக அமைகின்றன. குறிப்பாக, பயணிகள் அதிகம் பேர் பயன்படுத்தும் பகுதியாக சென்ட்ரல் கணக்கிடப்பட்டுள்ளதால், இங்கு பூமிக்கு அடியில் அமைந்து வரும் 2 அடுக்கு ரெயில் நிலையங்களும் ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நிலையங்களிலேயே பெரிய அளவில் வணிக வளாகங்கள், வாகன நிறுத்தும் இடம் ஆகியவை அமைகின்றன. மேலும், சுரங்க ரெயில் நிலையங்களில் இருந்தே சென்டிரல் ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வகையில் தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், மெட்ரோ ரெயில் சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விமான பயணிகளுக்கு உதவும் வகையில் மேலும் ஒரு வசதி செய்யப்பட உள்ளது. அதாவது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில், விமான நிலைய சோதனைகளை முடிக்கும் வசதியை செய்ய மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்ட்ரலில் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் 2 மெட்ரோ ரெயில் நிலையங்களும் பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றன. இதில், வணிக வளாகம், வாகன நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. சென்டிரல் ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடமும், இதன் கீழ்தளத்திலேயே அமைய உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும்போது, விமான பயணிகளும் மெட்ரோ ரெயில் சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, விமான பயணிகளுக்கு வசதியாக, அவர்களின் உடைமைகளை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே சோதனை செய்து அனுப்ப சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். எனவே சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலேயே விமான நிலைய ஆணைய அலுவலகம் அமைக்கப்படும். மேலும், விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு ‘போர்டிங் பாஸ்’ வழங்க அந்தந்த விமான நிறுவன ஊழியர்கள் இருக்கும் வகையில் கவுன்டர்களும் அமைக்கப்படும்.
எனவே, விமானத்தில் செல்லும் பயணிகள் இங்கேயே தங்களது உடைமைகளை சோதனைகளுக்கு உட்படுத்தி, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள் அதை மெட்ரோ ரெயில் மூலமே தனியாக பாதுகாப்புடன் விமான நிலையம் எடுத்துச் சென்று, பயணிகள் செல்லும் விமானத்தை கண்டறிந்து, அந்த விமானத்தில் உடைமைகளை ஏற்றிவிடுவார்கள்.
விமானத்தில் செல்லும் பயணிகளும் ‘போர்டிங் பாஸ்’-ஐ சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலேயே பெற்றுக்கொள்வதால், நேரடியாக விமானத்தில் சென்று ஏறிக்கொள்ளலாம். இதுபோன்ற வசதி செய்யப்படுவதால், விமான பயணிகள் மெட்ரோ ரெயிலை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : Chennai Metro has introduced free boarding pass for air passengers.