cancer3216உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்பட்டு வரும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா இன்றைய உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 35 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டில் 5,600 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை மார்பகப் புற்றுநோய் ஒரு லட்சத்தில் 16 பேர் என்பது தற்போது 35 பேர் என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரு லட்சம் பெண்களில் 35 பேருக்கு இருந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய், தற்போது 16 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்களுக்கு வயிறு, நுரையீரல், வாய், பெருங்குடல், நாக்கு ஆகிய பகுதிகளில் புற்றுநோய் அதிக அளவில் பாதிக்கிறது. பெண்களைப் பொருத்தவரை மார்பகம், கர்ப்பப்பை வாய், கர்பப்பை, வயிறு ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மது அருந்துவதால் வாய், தொண்டை, குரல்வளை, மார்பகம், குடல், கல்லீரல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும். இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் புகையிலை பயன்பாட்டின் மூலம் ஆண்களில் 45 சதவீதம் பேருக்கும், பெண்களில் 20 சதவீதம் பேருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர உடல் பருமன், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களினாலும் புற்றுநோய் தாக்குகிறது.

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். அறிகுறிகள் தெரிந்தாலும் காலம் தாழ்த்தியே மருத்துவரை அணுகுகின்றனர். அலட்சியம், பயத்தின் காரணமாக நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால், அதை எளிதில் குணப்படுத்த முடியும்.

உணவில் அதிக பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வதாலும், வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

English Summary: Breast Cancer for 35 person in a millon Womens in Chennai.