சென்னை: இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (டி.சி.ஓ.ஏ.) நிறுவன தலைவர் பி.சகிலன் கூறியதாவது: கேபிள் டி.வி.யில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது 8-வது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்கிற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாக அறிவித்துள்ளன. அதற்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும், கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர். தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறைகளான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் ரூ.200-க்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்ய முயன்றால் ரூ.600-க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
தமிழகத்தில் 1.5 கோடி இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில், தற்போதைய விதிமுறை காரணமாக கோடிக்கணக்கில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் செலவிட வேண்டிவரும். ரூ.200-க்கு பார்க்கும் சானல்களை ரூ.600 கொடுத்து பார்க்கும் நிலையை கார்பரேட் கம்பனிகளுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.70-க்கு அதிக சானல்களை வழங்கினார். புதிய திட்டத்தால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படும் என்பதுடன், ஜெயலலிதாவின் அடிப்படை எண்ணமும் சிதைக்கப்படும் என்று அறிந்து முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும்.
100 சானல்கள் வழங்கிய முறை மாறி, தற்போது 500 சானல்கள் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கருவிகள் வாங்கப்பட்டு சேவை நடந்துவருகிறது. இந்தநிலையில் திடீரென்று யாரையும் ஆலோசிக்காமல் தவறான முறையில் ரூ.130 என டிராய் அறிவித்து உள்ளது. தூர்தர்சனின் அனைத்து சானல்களையும் கண்டிப்பாக இலவசமாக காட்ட வேண்டும் என்ற விதிமுறையை அறிவித்த டிராய், இந்திய சானல்கள் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5-க்கு மேல் வைக்கக்கூடாது என கூறியிருந்தால் கட்டண உயர்வு கட்டுக்குள் இருந்திருக்கும். ஜி.எஸ்.டி.யையும் ரத்து செய்ய வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டறை நிறுவனங்களை அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் ஆதரவோடு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 29 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.