சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பெருநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன், வி.ஏ.ரவிக்குமார், ஆபாஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை ஆணையர்கள் சி.ஸ்ரீதர், ஏ.அருண் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 70 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆணையர் ராஜேந்திரன் பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது: பண்டிகை காலம் தொடங்கியிருப்பதால், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு வரும் மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும், வாகன நிறுத்துமிடங்களில் அதிகத் திறன் கொண்ட கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும், கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்துத் தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்
மேலும் வளாகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்த பின்னரே, அனுமதிக்கப்பட வேண்டும், வாடிக்கையாளர் கொண்டு வரும் பொருள்களையும் “பேக்கேஜ் ஸ்கேனர்’ மூலம் சோதனை செய்ய வேண்டும், வலுவான பாதுகாவலர்களை உரிய பயிற்சி அளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், வளாகத்தில் சந்தேகப்படும்படியான பொருள்கள் கிடந்தாலோ, தொலைபேசியில் மிரட்டல்கள் வந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் ராஜேந்திரன் பேசினார்.
மேலும்ஓட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையின் தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் அவ்வப்போது சோதனை செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.english summary-Chennai police advised to keep cctv at malls