டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி பொருத்துவது ஆகியவற்றை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியிட உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது கூறியதாவது: பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி, சிசிடிவி காமரா, வாகன நடமாட்டத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பொருத்துவதை கட்டாயமாக்குவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் மேற்கண்ட சாதனங்கள் அனைத்தையும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பேருந்தை கட்டமைக்கும்போதே அந்தக் கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த சாதனங்கள் அனைத்தையும் மொத்தமாக கொள்முதல் செய்யும்போது, அவற்றின் விலையும் குறையும்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் தங்களுக்கு துன்பம் நேரிடும்பட்சத்தில், அந்தப் பேருந்துகளில் இருக்கும் அவசரகால எச்சரிக்கை பொத்தானை அவர்கள் அழுத்த வேண்டும். அப்போது, ஜிபிஎஸ் கருவியுடன் உதவியுடன் அந்தப் பேருந்து எந்தப் பகுதியில் செல்கிறது என்ற தகவல் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு செல்லும். எச்சரிக்கை பொத்தானை பெண்கள் அழுத்தியதும், பேருந்தில் நடைபெறும் காட்சியை சிசிடிவி காமரா பதிவு செய்து நேரலையாக அந்தக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதேவேளையில், பேருந்து தான் செல்லும் பாதையில் இருந்து விலகி வேறு பாதையில் சென்றாலும், அந்த தகவலும் காவல்துறைக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிந்து விடும். இதன்மூலம் காவல்துறையினர் விரைந்து வந்து, பொத்தானை அழுத்திய பெண்களின் குறைகளைக் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமலுக்கு வந்ததும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை அந்தக் கருவிகளே உறுதி செய்யும்’ என்று நிதின் கட்கரி கூறினார்.
English Summary : CCTV in Government buses, GPS compulsory says Nitin Gadkari.