சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் என ஜங்சன்கள் என்று கூறப்படும் ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 3வது முனையமாக தாம்பரம் ரெயில் நிலையத்தை விரைவில் கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுவதால் பிளாட் பாரம் பிரச்சனை, ரெயில் போக்குவரத்தை கையாள்வதில் சிரமங்கள் ஆகியவை எழுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறப்பு ரெயில்களும், பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் எழும்பூர் வழியாக கடந்து செல்வதால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தில் வருவது தாமதமாகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க தென்மாவட்டத்திற்கு தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்கும் வகையில் தாம்பரம் நிலையத்தை 3வது முனையமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் ரெயில் நிலையம் 3வது முனையமாக செயல்பட தொடங்கினால் தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்களை அங்கிருந்து கையாளவும் ஒரு சில ரெயில்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3வது ரெயில் பாதையின் அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கலந்து கொண்டு தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரெயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த விழாவில் அவர் சின்னசேலம் – கள்ளக்குறிச்சி இடையே புதிய ரெயில் பாதை திட்டப் பணியையும் தொடங்கி வைக்கிறார்.
திருச்சி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு வசதியை பயணிகளுக்கு திறந்து வைக்கிறார். இதையடுத்து அவர் சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 3வது ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்குவதால் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க முடியும். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் தினமும் 250 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 170 ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே சென்று வருகிறது. ஆனால் எல்லா மின்சார ரெயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் கோரிக்கையாகும். ஆனால் அதற்கு மற்றொரு ரெயில் பாதை தேவைப்படுகிறது. 3வது பாதை திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கடற்கரை – செங்கல்பட்டு இடையே அதிக மின்சார ரெயில் சேவைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ரயில்வே வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
English Summary: Central, Egmore is the 3rd terminal Tambaram.