தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 30, மே 1, 2-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 29, 30 தேதிகளில் நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 1-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கரூர் மாவட்டங்களிலும். மே 2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாம்பகுதியில் 11 செ.மீ., கொடைக்கானலில் 8 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் 5 செ.மீ.,தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.