தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒடிஸா கடலோரப்பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு தொடா்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் புதன்கிழமை (ஜூலை 28 முதல் ஆக.2) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வங்கக்கடல் பகுதிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது