மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(26.08.2023) முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவி பகுதியில் இரண்டு சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் பாளையங்கோட்டை மற்றும் கரூர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
27.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.08.2023 முதல் 31.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசும் என்பதால், அன்றைய தினம் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.