டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி , ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின் பேரில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இந்தத் தேர்வு அமலுக்கு வந்தது.
தமிழகபள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த 2017 பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த கல்வியாண்டில், அக்டோபர், 6 மற்றும் அக்டோபர் 7-ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தத் தேர்வை, தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தப்படாது எனவும், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி தான் இனி தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என நடத்த பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.