நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள சென்னை புத்தக சங்கமம் எனும் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை நேற்று சென்னை புத்தக சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் வி.அன்புராஜ், அ.புகழேந்தி, கோ.ஒளிவண்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த புத்தகக் கண்காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாள்களில் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் என்றும், இந்த கண்காட்சியுடன், பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்துகொள்ளும் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவைகளும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கண்காட்சியில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. நினைவாற்றல், பிழையின்றி தமிழ் எழுதுதல், அடிப்படை புகைப்படக்கலை ஆகிய போட்டிகள் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறுவர்கள் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெறும் அனைத்துத் புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய உள்ளதாகவும், உலக புத்தக நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி மட்டும் 15 சதவீத தள்ளுபடி விலையிலும் புத்தகங்கள் கிடைக்கும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தகக் கண்காட்சிக்கு பள்ளி மாணவ மாணவியர்கள் அடையாள் அட்டையுடன் வந்தால் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி குறித்த மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.chennaiputhagasangamam.com என்ற இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.